60 கிலோ கஞ்சா- 1¾ லட்சம் லிட்டர் சாராயம் பறிமுதல்


60 கிலோ கஞ்சா- 1¾ லட்சம் லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 கிலோ கஞ்சா மற்றும் 1¾ லட்சம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறினார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 கிலோ கஞ்சா மற்றும் 1¾ லட்சம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறினார்.

பரிசளிப்பு விழா

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் மற்றும் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி, போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 120 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

60 கிலோ கஞ்சா பறிமுதல்

இதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் மட்டுமின்றி சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 355 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 50 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலை தடுப்பதற்காக நல்லாடை, நண்டலாறு, ஆயப்பாடி ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புகார் தெரிவிக்கலாம்

சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை, சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை மற்றும் மதுவிலக்குபிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் அதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்காக 96261 69492 என்ற வாட்ஸ்-அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார். முன்னதாக நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் வரவேற்று பேசினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் நன்றி கூறினார்.


Next Story