ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் 5,516 பேர் வாக்களிக்க உள்ளனர்


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் 5,516 பேர் வாக்களிக்க உள்ளனர்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் 5,516 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பெரம்பலூர்

இடைத்தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரம்பலூர் ஒன்றிய மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆலத்தூர் ஒன்றிய இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பூர் ஒன்றிய கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி ஆகிய பதவியிடங்களுக்கு வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இதில் கீழப்புலியூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவி, இரூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அந்த பகுதிகளில் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறாது.

தேர்தல் பிரசாரம்

மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதனால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. மேலப்புலியூர் கிராம ஊராட்சியில் நடைபெறவுள்ள கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 2,424 ஆண் வாக்காளர்களும், 2,505 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4-ல் 105 ஆண் வாக்காளர்களும், 112 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். வி.களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7-ல் 166 ஆண் வாக்காளர்களும், 204 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் 2,695 ஆண் வாக்காளர்களும், 2,821 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,516 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அந்தபகுதிகளில் வருகிற 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

12-ந்தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story