ஓய்வு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி


ஓய்வு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்த கேரள வியாபாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

பீளமேடு


கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்த கேரள வியாபாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி


கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜெயசிம்மபுரத்தை சேர்ந்தவர் விவேகானந்தராஜன் (வயது 59). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-


நான் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நான் வங்கி மேலாளராக பணிபுரிந்த போது சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், கேரளாவில் பர்னீச்சர் கடை மற்றும் மர வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் கூறினார்.


மிரட்டல்


இந்த நிலையில் அவர் தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், மர வியாபாரத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்திற்குள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய நான் அவருக்கு ரூ.54 லட்சத்து 7 ஆயிரம் கடன் வழங்கினேன்.

அதை பெற்று கொண்ட அவர் கூறியபடி எனக்கு வட்டியோ அல்லது அசலோ திருப்பி தரவில்லை. எனது பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும் திருப்பி தர மறுத்ததுடன், என்னை மிரட்டுகிறார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


இந்த புகாரின் பேரில் சசிகுமார் மீது பீளமேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story