'வந்தே பாரத்' ரெயிலில் 539 பேர் பயணம்


வந்தே பாரத் ரெயிலில் 539 பேர் பயணம்
x

நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரெயிலில் நேற்று 539 பயணிகள் பயணம் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயிலில் நேற்று 539 பயணிகள் பயணம் செய்தனர்.

'வந்தே பாரத்' ரெயில்

நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயிலை கடந்த 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரெயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு சென்னைக்கு 'வந்தே பாரத்' ரெயில் தனது பயணத்தை முதல் முறையாக தொடங்கியது.

539 பயணிகள்

இந்த ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர்.

இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர்.

முதல் நாளான நேற்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் 'வந்தே பாரத்' ரெயில் சென்னைக்கு மதியம் 1.54 மணிக்கு சென்றடைந்தது.

இதைத்தொடர்ந்து மறுமார்க்கமாக நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடைந்தது. இதில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

பயணிகள் கோரிக்கை

இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story