5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு


5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை  -  அமைச்சர் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 March 2023 2:51 PM GMT (Updated: 29 March 2023 3:37 PM GMT)

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் 6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, சிறப்பு ஆபர் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஒரே மாதத்தில் 6வது முறையாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ பயணம் செய்யும்போது பயணக் கட்டணத்தில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் பெண்கள் தனியாக பயணம் செய்ய தயங்குகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், பெண்களுக்கு பிரத்யேகமாக அதிக இருக்கையில் வழங்கப்பட்டால் அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புவார்கள் என்றார்.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு என தனியாக நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும், என்றும் பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை இணையதளத்தில் முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்றும் அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். மேலும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், கட்டணமில்லா பேருந்துகளில் கடந்த 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் மாதந்தோறும் ரூ.1,500 வரை சேமிக்கப்படுகிறது.

கட்டணமில்லா பேருந்து திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Next Story