சென்னையின் முக்கிய சாலைகளை இரவு நேரங்களில் நவீன எந்திரங்கள் மூலம் 50 கி.மீ. வரை சுத்தம் செய்ய வேண்டும்


சென்னையின் முக்கிய சாலைகளை இரவு நேரங்களில் நவீன எந்திரங்கள் மூலம் 50 கி.மீ. வரை சுத்தம் செய்ய வேண்டும்
x

சென்னையின் முக்கிய சாலைகளை நவீன எந்திரங்கள் மூலம் இரவு நேரங்களில் 50 கி.மீ. வரை சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. பஸ் சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பஸ் சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நவீன எந்திரமான 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு இந்த மணல் மற்றும் தூசிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெருநகர சென்னை மநாகராட்சியின் 15 மண்டலங்களில் சாலைகளை சுத்தம் செய்ய 56 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 7 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்களும், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய '16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்களும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 33 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களை முழு திறன் அளவிற்கு பயன்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு வாகனமும் 50 கி.மீட்டர் நீள சாலைகளை சுத்தம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story