வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்


வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 1 March 2023 7:30 PM GMT (Updated: 1 March 2023 7:30 PM GMT)
சேலம்

பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு ெஜயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பீர்பாட்டிலால் தாக்குதல்

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்கள் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நித்யாவின் சகோதரர் சந்திரகுமார் (29), அவருடைய நண்பர் தீனதயாளன் (30) ஆகியோர் அறை எடுத்து மது அருந்தினர்.

அப்போது, அங்கு ராஜசேகரையும் வரவழைத்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது, போதை அதிகம் ஆனவுடன் அவர்கள் ராஜசேகரிடம் மனைவியை பிரிந்து இருக்கும் நீ எதற்காக அடிக்கடி நித்யாவை சந்தித்து குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்துகிறாய்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், அங்கிருந்த பீர்பாட்டிலால் ராஜசேகரின் தலையில் அடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

5 ஆண்டு ெஜயில்

இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் புகார் செய்தார். இந்த வழக்கு சேலம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிரிஸ்டல் பபிதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் ராஜசேகரை பீர்பாட்டிலால் தாக்கிய தீனதயாளனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சந்திரகுமார் விடுதலை செய்யப்பட்டார்.


Next Story