மக்கள் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்பு


மக்கள் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்பு
x

மக்கள் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் மக்கள் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் மீட்கப்பட்டன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தாா்.

காணாமல் போன செல்போன்கள்

தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்குஅலங்கம், திலகர் திடல், பெரியகோவில் சாலை, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி மற்றும் மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தர வேண்டும் என பலர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில்ஈடுபட்டனர். அதில் தஞ்சையில் காணாமல் போன செல்போன்களை திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

45 செல்போன்கள் மீட்பு

இதையடுத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, சிலர் இந்த செல்போன்கள் கீழே கிடந்ததாகவும், சிலர் விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இந்த செல்போன்கள் எல்லாம் காணாமல் போனதாக புகார் வரப்பெற்றுள்ளதால் செல்போன்களை ஒப்படைக்கும்படி போலீசாா் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர், நாங்கள் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறோம். எங்களது பணத்தை ஒப்படைத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ளுங்கள் என கூறினர். சிலரோ செல்போன்களை நேரில் வந்தால் ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்தனர்.

செல்போன்களை ஒப்படைக்க விரும்பியவர்களிடம் போலீசார் நேரில் சென்று செல்போன்களை பெற்று கொண்டனர். மறுப்பு தெரிவித்தவர்களிடம் சட்டம் குறித்து எடுத்து கூறி செல்போன்களை பெற்று வந்தனர். இதன்படி மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்கள் மீட்கப்பட்டன.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கலந்து கொண்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு விலை உயர்ந்த செல்போன்களை வாங்குகிறீர்கள். அந்த செல்போன்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். சாலையில் நடந்து செல்லும்போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும் செல்போன்களை உபயோகப்படுத்திக் கொண்டே செல்லக்கூடாது. புதிதாக செல்போன்களை வாங்குபவர்கள் ஐ.எம்.இ.ஐ. நம்பர் எழுதப்பட்ட ரசிதையும் பெற வேண்டும்.

ரசீது அவசியம்

ரசீது இல்லாமல் செல்போன்களை வாங்க வேண்டாம். திருடிய செல்போன்களையும், கீழே தவறவிட்ட செல்போன்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அந்தமாதிரி குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தும்போது அந்த செல்போன்களை தவறிவிட்டவர்கள் புகார் அளித்திருந்தால் நீங்கள் அந்த செல்போன்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உங்களுக்கு தான் பண இழப்பு ஏற்படும். எனவே விழிப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு செந்தில்குமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story