4 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்
சேந்தமங்கலம்:-
பெண்ணிடம் நகை பறித்த 4 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேந்தமங்கலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பெண்ணிடம் நகை பறிப்பு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரியங்கா. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஒரு மொபட்டில் தங்களது குழந்தையுடன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
பச்சுடையாம்பட்டி பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது 4 பேர் பிரியங்கா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பிரியங்கா சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொள்ளவே பாதியாக அறுந்து 3 பவுன் பிரியங்கா கையில் சிக்கியது. மீதி நகையுடன் தப்பி செல்ல முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
4 பேருக்கு ஜெயில்
இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லையை சேர்ந்த ரம்ஜான்கனி (24), காசிம்ராஜா (26), திருப்பத்தூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் (40), வாணியம்பாடி சுதாகர் (41) ஆகியோரை கைது செய்து சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அரிகரன் தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.