ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
x

ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, ஆழியாறு, கோட்டூர் பகுதிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பாரதநேரு மற்றும் போலீசார் ஆனைமலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது, உள்ளே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதைதொடர்ந்து போலீசார் காரில் இருந்த 4 பேரையும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் காரையும் நல்லூரில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளாவை சேர்ந்த டிரைவர் ரித்தீஸ் (வயது 33), சஞ்சித் (27), சஜிவு (27), சச்சின் (27) என்பது தெரியவந்தது.

மேலும் ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தினோம் என தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 30 மூட்டைகளில் 50 கிலோ வீதம் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story