பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது


பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது
x

முத்துப்பேட்டை அருகே பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நடந்த தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நடந்த தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணவன்-மனைவி தகராறு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 38). இவர் வாடகை பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தனலட்சுமிக்கும்(35) கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

காயங்களுடன் பிணமாக கிடந்தார்

கடந்த 21-ந் தேதி மகேந்திரன் வெளியூர் சென்றிருந்தார். அன்று இரவு வீட்டை ஒட்டி உள்ள ஒரு சிறிய வீட்டில் உள்ள கட்டிலில் தனலட்சுமி தூங்கினார். பெரிய வீட்டில் அவருடைய மாமியார் ரஞ்சிதம்(70) மற்றும் குடும்பத்தினர் தூங்கினர். மறுநாள் 22-ந் தேதி காலை நீண்ட நேரமாகியும் சிறிய வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனலட்சுமி வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தனலட்சுமி ரத்த காயங்களுடன், தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

குழந்தை இல்லாததால் தகராறு

முதல் கட்ட விசாரணையில் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் நடந்த தகராறில் மாமியார் ரஞ்சிதம் உள்ளிட்டோர் சேர்ந்து தனலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ரஞ்சிதம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், 'குழந்தை இல்லாததால் தனலட்சுமிக்கும், அவருடைய மாமியார் ரஞ்சிதத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று இரவும் அவர்களிடையே தகராறு நடந்துள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த ரஞ்சிதம், தனது மகன் மகேந்திரன் வெளியூர் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி தூங்கி கொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் இரும்பு கம்பியால் குத்தி உள்ளார். இதில் ரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் தனலட்சுமி துடித்துள்ளார்.

அடித்துக்கொலை

இதைத்தொடர்ந்து தனலட்சுமியின் முகத்தில் 15 வயது சிறுவன் துணையுடன் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துக்கொலை செய்ததாக ரஞ்சிதம் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் கூறினர்.

இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதத்தையும், கொலைக்கு உடந்தையாக இருந்த 15 வயது சிறுவனையும் கைது செய்தனர். மேலும் வரதட்சணை கொடுமை செய்து கொலைக்கு தூண்டியதாக தனலட்சுமியின் கணவர் மகேந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

நாத்தனார்களுக்கு வலைவீச்சு

இந்த வழக்கு தொடர்பாக தனலட்சுமியின் நாத்தனார்கள் ரமணிதேவி(42), கலாதேவி(44) ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழந்தை இல்லாததால் மருமகளை மாமியார் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story