சிறுவர்கள் உள்பட 30 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு


சிறுவர்கள் உள்பட 30 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு
x

சிறுவர்கள் உள்பட 30 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில், சிறுவர்கள் உள்பட 30 பேர் மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தான் இதற்கு காரணம் என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் காமாலை

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 33-வது வார்டில் உள்ள கோரிகுளம் மற்றும் 36-வது வார்டில் உள்ள பூக்கார வடக்கு தெருவில் வசித்து வருபர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக திடீரென காய்ச்சல், வாந்தி போன்ற பாதிப்பு ஏற்பட்டது.

உடனே அவர்கள் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர். அவர்களுக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

கோரிகுளம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் உள்பட 16 பேரும், பூக்கார வடக்கு தெருவில் 14 பேரும் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு ஆளாகினர்.

சிறப்பு மருத்துவ முகாம்

இதையடுத்து மாநகராட்சி சார்பில் கோரிக்குளம், பூக்கார வடக்கு தெருவில் உள்ள வீடுகள் மற்றும் கழிவுநீர் வடிகால்களை சுற்றிலும் 'பிளீச்சிங் பவுடர்' தூவப்பட்டது. மேலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவைப்படுவோருக்கு ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கும், வீடு வீடாகவும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த நிலையில் மருத்துவ முகாம் நடைபெறும் பகுதியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் நிருபர்களிடம் கூறும்போது, குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் சொல்லுகிறார்கள். முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. இருப்பினும் இந்த பகுதியில் குடிநீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்.

அந்த அறிக்கை வந்த பிறகு அதன் தொடர்பான பணிகளை மேற்கொள்ள உள்ளோம். 2 வார்டுகளிலும் 4 பகுதிகளாக பிரித்து தலா 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் கொண்ட முகாம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். அத்துடன், வீடு வீடாக சென்று மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. 30 பேரில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். மீதமுள்ள 20 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

சுகாதாரமற்ற குடிநீ்ர்தான் காரணம்

அந்த பகுதி மக்கள் கூறும்போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் முறையாக குடிநீர் தொட்டி, சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்வது இல்லை. சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் தான் குழந்தைகள் உட்பட பலருக்கும் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. ஒரே வீட்டில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story