மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை


மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 11 July 2023 7:55 PM GMT (Updated: 12 July 2023 12:20 PM GMT)

மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

மின் இணைப்பு வழங்க லஞ்சம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா சமயபுரம் தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் சவரிமுத்து. இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவி ரத்தினமேரி பெயரில் புதிதாக மின் இணைப்பு வேண்டி சமயபுரம் இளமின்பொறியாளர் அலுவலகத்தில் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாரிடம் விண்ணப்பித்தார். ஆனால் அவர் மின் இணைப்பு வழங்க ரூ.900 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சவரிமுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சவரிமுத்துவிடம் லஞ்சப்பணத்தை மின் ஆய்வாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி லஞ்சப்பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

சிறை தண்டனை

இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story