ரூ.4¼ கோடி மோசடி வழக்கு: ஈமு கோழி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை
ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.4¼ கோடி மோசடி வழக்கில் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் நாதன் (வயது 37), சிதம்பரம் (40) ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் அம்மன் ஈமு பார்ம் ஆரம்பித்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு 2 சலுகை திட்டங்களை அறிவித்தனர்.
இதன்படி முதலாவது திட்டத்தில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் மற்றும் மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதுடன் 3 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும். மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையும், 24 மாதங்களில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தப்படி அந்த நிறுவனத்தால் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படவில்லை
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் 129 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 500 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றம் (டான்பிட்) நடைபெற்று வந்தது.
இதனைடையே ஈமு பார்ம்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில் நாதன் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு பிரிக்கப்பட்டு தனி வழக்காக நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி குறித்த வழக்கை விசாரித்த டான்பிட் கோர்ட்டு நீதிபதி ரவி, அம்மன் ஈமு பார்ம்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 கோடியே 6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.