கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 3 பெண்கள் மர்ம மரணம்! கள்ளக்காதல் காரணமா? போலீசார் விசாரணை


கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 3 பெண்கள் மர்ம மரணம்! கள்ளக்காதல் காரணமா? போலீசார் விசாரணை
x

கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்திருக்கும் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல் முருகன் என்பவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது தனது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கிணற்றில் மிதந்த சிறுமி உட்பட மூன்று பெண்களின் சடலங்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி காவ்யா தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூறிய விசாரணை அதிகாரிகள், ``மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன், சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த சிவகுருநாதன், 2004-ம் ஆண்டு சென்னை போரூரிலிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது மிஸ்பா சாந்தி என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அப்போது மிஸ்பா சாந்தியுடன் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டு சிவகுருநாதன், திருமணம் செய்துகொள்ளாமலே அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் மிஸ்பா சாந்தி கர்ப்பமானதால் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த விவகாரம் சிவகுருநாதனின் முதல் மனைவி சுமதிக்கு தெரியவந்ததால், கணவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நவம்பர் 27-ம் தேதி தனது மகள் மற்றும் தாயுடன் மலையனூர் வந்த மிஸ்பா சாந்தி, தாங்கள் இனிமேல் இங்குதான் இருக்கப்போவதாகவும், தங்களுக்கு தனியாக வீடு எடுத்து தரும்படியும் கூறியிருக்கிறார். அதனடிப்படையில் சிவகுருநாதனும் அவர்களுக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறார்.

நேற்று 30-ம் தேதி இரவு வழக்கம்போல அவர்களுக்கு உணவு வாங்கிச் சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அங்கு இல்லை என்றும் அவர்களை தேடிப் பார்த்துவிட்டு சிவகுருநாதன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில்தான் இன்று காலை கிணற்றில் மிதந்த மூவரின் சடலங்களையும் மீட்டிருக்கிறோம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

8 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கிணற்றில் சடலமாக மிதந்தது தற்கொலையா அல்லது கொலையா? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story