2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலி


2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலி
x

தனித்தனி விபத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர்


புதுப்பேட்டை அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவருடைய மகன் வினித்குமார் (வயது 11). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று விநாயகமூர்த்தி தனது மகன் வினித்குமாருடன் அருகே உள்ள வயலுக்கு சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் வந்தபோது, எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தந்தை-மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இதைபார்த்த அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தான். விநாயகமூர்த்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் முகமது பாவாஸ்(வயது 18). இவர், கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வாழப்பட்டு பகுதியில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது திடீரென்று சாலையில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த முகமது பாவாசை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது பாவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மந்தாரக்குப்பம் ஐ.டி.ஐ. நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (51). கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் சைக்கிளில் மந்தாரக்குப்பம் காய்கறி மார்க்கெட் அருகே கடலூர்-சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குருமூர்த்தி மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

அந்த சமயத்தில் வடலூரில் இருந்து நெய்வேலி நோக்கி வந்த டிப்பர் லாரி சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story