3 வழக்குகளில் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


3 வழக்குகளில் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

3 வழக்குகளில் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

4 வழக்குகளுக்கு தீர்ப்பு

சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சில வழக்குகள் விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் ஸ்கேன் மையம், மருத்துவமனைகள் மீதான ெமாத்தம் 4 வழக்குகளை நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தும், மற்ற 3 வழக்குகளில் புகார்தாரர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தவறான 'ஸ்கேன்' அறிக்கை

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசிப்பவர் திலீப்குமார். இவரது மனைவி வசுந்தரா(வயது 37). இவர் கடந்த 29.1.2017 அன்று சென்னை ஆழ்வார் திருநகரியில் உள்ள சம்யுக்தா 'ஸ்கேன்' மையத்தில் 'ஸ்கேன்' பரிசோதனை செய்து, அதனை தான் சிகிச்சை பெற்ற டாக்டரிடம் காட்டியுள்ளார். அதனை பார்த்த டாக்டர், அவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். பின்னர் டாக்டரின் அறிவுறுத்தலின்படி வேறொரு மையத்தில் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது வசுந்தராவுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்றும், முதலாவது ஸ்கேன் தவறு என்றும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், புகார்தாரர் முதலாவது 'ஸ்கேன்' மையம் தவறான அறிக்கையை வழங்கியுள்ளது என்பதை நிரூபித்துள்ளார். இதனால் கட்டண தொகை மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை புகார்தாரருக்கு, அந்த 'ஸ்கேன்' மையம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தலைமுடி சிகிச்சை

இதேபோல் சென்னை வடபழனியை சேர்ந்த வாசுதேவனின் மகன் விபின்தேவ்(33), தலையில் வழுக்கை பிரச்சினையை சரி செய்ய தியாகராய நகரில் உள்ள அட்வான்ஸ்டு பியூட்டி-காஸ்மெடிக் கிளினிக் என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, தலையில் முடியை நடுதல் சிகிச்சை மூலம் வழுக்கை பிரச்சினையை சரி செய்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கடந்த 31.1.2016 அன்று ரூ.60 ஆயிரம் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே இருந்ததை விட மோசமாக தலையில் வழுக்கை ஏற்பட்டதோடு, தொடர் சிகிச்சையை வழங்க தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், புகார்தாரரிடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக அந்த மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த பொற்பதத்தின் மனைவி கீதாலட்சுமி(32), சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா ஹாஸ்பிடல்ஸ் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை, அறை வாடகை உள்பட மொத்த கட்டணம் ரூ.60 ஆயிரம் என்று மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரூ.46 ஆயிரத்து 405-ஐ முன்பணமாக பொற்பதம் செலுத்தியுள்ளார். பின்னர் அவரது மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தினர் ரூ.48 ஆயிரம் செலுத்தியுள்ளனர். சிகிச்சை முடிவடைந்த பின்னர் கூடுதலாக செலுத்திய பணத்தை மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், புகார்தாரரிடம் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.34 ஆயிரத்து 405-ஐ புகார்தாரருக்கு மருத்துவமனை வழங்க வேண்டும். மேலும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story