மாணவிகள் 3 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது


மாணவிகள் 3 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது
x

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை

மாணவிகளின் தொடர் சாதனை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து அதிக மதிப்பெண் பெற்று பல மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படித்து தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் டாக்டர்களாக உள்ளனர். இதேபோல பொறியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல துறைகளிலும் பணிகளில் உள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசால் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே மாணவிகள் 4 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதே போல அடுத்த ஆண்டு 7 மாணவிகளும் கடந்த ஆண்டு ஒரு மாணவியும் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர்.

3 பேருக்கு இடம்

அதேபோல இந்த ஆண்டும் ஏராளமான மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கான மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் 457 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுருதி மதுரை அரசுப்பள்ளி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும், 418 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜனனி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும், 375 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுபதாரணிக்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது.

வழக்கம் போல இந்த ஆண்டும் ஒரே பள்ளியிலிருந்து 3 மாணவிகள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அறிந்து மாணவிகளையும், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், எஸ்.எம்.சி நிர்வாகிகள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story