காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் துறைமுக நிறுவனங்களில் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 299 பேர் கைது


காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் துறைமுக நிறுவனங்களில் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 299 பேர் கைது
x

காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் கப்பல் கட்டும் துறைமுக நிறுவனங்களில் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 44 பெண்கள் உள்பட 299 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

கப்பல் கட்டும் நிறுவனங்கள்

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கடலோர பகுதியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கும் பழவேற்காடு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1,750 மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் அறிவித்தது.

இதில் முதல் கட்டமாக 250 பேர் குறைந்தபட்ச ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இதனை அடுத்து மீனவர்கள் 1,500 பேருக்கு வேலை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

299 பேர் கைது

இந்த நிலையில் 4 மாதங்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து பழவேற்காடு, தாங்கள்பெரும்புலம், அரங்கன்குப்பம், சாத்தாங்குப்பம், திருமலை நகர், பசியாவரம், கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உட்பட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு நேற்று காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஆவடி மாநகர போலீசார், 2 உதவி கமிஷனர் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்திய 44 பெண்கள் உட்பட 299 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கண்டனங்கள் தெரிவித்து 1,500 பேருக்கு வேலை கொடு. வேலை வழங்கிய 250 பேரை பணி நிரந்தரம் செய், ஊதிய உயர்வு கொடு, தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story