சொத்து ஆவணங்களை தராததால், உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு


சொத்து ஆவணங்களை தராததால், உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு
x

கடன் தொகையை திருப்பி செலுத்தி பல ஆண்டுகள் ஆகியும் சொத்து ஆவணங்களை தராததால் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டை கூட்டுறவு சங்கம் வழங்க மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

கடன் தொகையை திருப்பி செலுத்தி பல ஆண்டுகள் ஆகியும் சொத்து ஆவணங்களை தராததால் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டை கூட்டுறவு சங்கம் வழங்க மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அடமான கடன்

மதுரை பீ.பீ.குளத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை கூடல்நகரில் உள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். 2004-ம் ஆண்டில் என்னுடைய பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என் மனைவியின் பெயரில் உள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றேன்.

அந்த அடமானக் கடன் தொகை முழுவதையும் 12.8.2015 அன்று செலுத்திவிட்டேன். இதையடுத்து கடன்தொகை முழுவதும் செலுத்தப்பட்டுவிட்டது என்று கூறி ரசீதும் அளித்தனர்.

அதன்பின்னர் எங்களின் சொத்து அசல் ஆவணங்களை திருப்பி தருமாறு கேட்டோம். பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. இதுவரை முறையான பதிலும் சொல்வதில்லை. எனவே அசல் ஆவணங்களை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

ரூ.25 ஆயிரம் இழப்பீடு

இந்த வழக்கு கோர்ட்டின் தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கூட்டுறவு பணியாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு சொந்தமான அசல் பத்திரங்களை உடனே திருப்பி அளிக்க வேண்டும். புகார்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் கூடல்நகர் கூட்டுறவு பணியாளர் சங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story