40 வகை போட்டிகளுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் தொழில்நுட்ப திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது


40 வகை போட்டிகளுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் தொழில்நுட்ப திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 31 Dec 2019 9:13 PM GMT (Updated: 31 Dec 2019 9:13 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி.யில் 40 வகை போட்டிகளுடன் தொழில்நுட்ப திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

சென்னை,

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் தொழில்நுட்ப திருவிழா (சாஸ்த்ரா - 2020) நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.ஐ.டி.யில் கடந்த 20 வருடங்களாக இந்த தொழில்நுட்ப திருவிழா நடைபெறுகிறது. என்ஜினீயரிங் என்பது புத்தகத்தில் படிக்கும் பாடம் மட்டும் இல்லாமல், மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களையும், புதிய தொழில்நுட்ப எண்ணங்களை செயல்வடிவங்களாக மாற்ற இந்த திருவிழா உதவுகிறது. இந்த தொழில்நுட்ப திருவிழா மூலம் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் வைத்து நடைபெறும் இந்த தொழில்நுட்ப திருவிழாவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியின் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவைகள் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இந்த தொழில்நுட்ப திருவிழாவில் மாணவர்களுக்கு 40 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் வி.கே.சரஸ்வத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக உதவி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு 24 மணிநேரம் ஒதுக்கப்படும், அந்த நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய கண்டு பிடிப்புகளை தயாரிக்கவேண்டும்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த தொழில்நுட்ப திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஆய்வுக்கூடங்கள், மாணவர்களின் வடிவமைப்புகள் உள்ளிட்டவைகளை பார்வையிடவும் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story