சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 18 Dec 2019 5:30 AM IST (Updated: 18 Dec 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலை சேலத்திற்கு விமானத்தில் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், செம்மலை ஆகியோர் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகைக்கு சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்தனர். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனிடையே முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நீங்கள் அதிகாரிகளிடம் மனுவை வழங்குமாறு முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து மாலையில் எடப்பாடியில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

அங்கு பல்வேறு கட்சியினர், முதல்-அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்று (புதன்கிழமை) காலையில் காமலாபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

Next Story