சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்துவதா? சென்னையில் நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்துவதா? சென்னையில் நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 5:15 AM IST (Updated: 10 Nov 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இருந்த பாடப்பகுதியை நீக்கக்கோரி சென்னையில் நாடார் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பாடப்பகுதியை நீக்கக்கோரி நாடார் அமைப்புகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் ஒருங்கிணைப்பு செய்து இருந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் வி.டி.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவனத்தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் வரவேற்புரையாற்றினார்.

இதில் சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி, மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிகோல்ராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவரும், நாடார் பேரவை தலைவருமான ஏ.நாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானங்கள்

* நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான எழுத்துகளையும், தரம் தாழ்ந்த உள்நோக்கத்துடனான சுய விமர்சனங்களையும் பாடப்பகுதியில் இருந்து அகற்றிவிடுவோம் என்று கூறி இதுவரையில் மாற்றி அமைக்காத மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி) நிறுவனத்தையும், மத்திய மந்திரிகளையும் நாடார் சமுதாயம் வன்மையாக கண்டிக்கிறது.

* நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய சமுதாய தீண்டாமை குற்றத்துக்காக ஜானகிநாயர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இந்த ஆர்ப்பாட்டம் தீர்மானிக்கிறது.

* நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தி பாடம் இடம்பெற்றுள்ள 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்பகுதிக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கும்படியும், மக்களிடையே மோதலை உருவாக்கும் இப்பாடத்துக்கு நிரந்தர தடைவிதிக்கும்படியும் கோரி சென்னை ஐகோர்ட்டில் நீதி பேராணை வழக்கு தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது.

* என்.சி.இ.ஆர்.டி. நிறுவனமும், மத்திய அரசும் நாடார் சமுதாயம் சார்ந்த உண்மைக்கு மாறான செய்திகளையும், ஜானகி நாயரின் சுயசாதி பெருமை பகுதியையும் தடைசெய்யாவிட்டால் ஜானகி நாயர் எழுதிய புத்தகத்தை குப்பை தாளாக நினைத்து வருகிற 30-ந்தேதி புத்தக எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்...

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜான் நிக்கல்சன், பயில்வான் ரங்கநாதன், நாடார் அமைப்புகளை சேர்ந்த டி.தங்கமுத்து, எம்.மாரித்தங்கம், மின்னல் எச்.ஸ்டீபன், பி.ஆர்.பிரதாப்சந்தர், சிலம்பு எஸ்.சுரேஷ், ஏ.ஹரிநாடார், ஆர்.எஸ். முத்து, சு.மங்கள்ராஜ், முத்து ரமேஷ், பி.விஜயகுமார், கே.எம்.ஜூலியன், பி.தாமஸ், விஜயா சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏ.சி.சண்முகம் அறிக்கை

இதுதொடர்பாக புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடார் சமுதாயத்தை பற்றி சி.பி. எஸ்.இ. பாடத்திட்ட புத்தகத்தில் இழிவாக எழுதியுள்ளது முறையற்ற செயல் ஆகும். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உடனடியாக குறிப்பிட்ட பாடப்பகுதியை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்கள் தயாரிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story