இந்து கடவுளை அவதூறாக பேசிய வழக்கு: வடபழனி போலீஸ் நிலையத்தில் இயக்குனர் பாரதிராஜா ஆஜர்


இந்து கடவுளை அவதூறாக பேசிய வழக்கு: வடபழனி போலீஸ் நிலையத்தில் இயக்குனர் பாரதிராஜா ஆஜர்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:05 AM IST (Updated: 14 Aug 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

இந்து கடவுளை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக வடபழனி போலீஸ் நிலையத்தில் இயக்குனர் பாரதிராஜா ஆஜராகி கையெழுத்து போட்டார்.

பூந்தமல்லி,

‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 18-ந் தேதி வடபழனியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இந்து மத கடவுளை அவமதித்து, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஒரு இந்து அமைப்பை சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர் வடபழனி போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவின் பேரில் இயக்குனர் பாரதிராஜா மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எனினும் இந்த வழக்கில் பாரதிராஜா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். இந்த முன்ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில் சைதாப்பேட்டை 17-வது நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10-ந் தேதி அவர் ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வாரங்களுக்கு வடபழனி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று பாரதிராஜாவுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று காலை 11 மணியளவில் இயக்குனர் பாரதிராஜா வடபழனி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு விட்டு சென்றார்.

Next Story