சென்னையில் 19-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
சென்னையில் 19-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் 19-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதி இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு கூடியிருக்க வேண்டும்.
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் தி.மு.க. சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வழக்கமாக, இந்த மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் தான் ஆண்டுதோறும் நடைபெற்று வந்திருக்கின்றன. தே.மு.தி.க.வின் பொதுக் குழுவும் நடைபெற்று இருக்கிறது.
ஆனால், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இங்கு நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் தான் தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.
தற்போது, தி.மு.க.வில் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. அதிகம் பேர் அமரும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் இடவசதி இல்லாததால் தான், இந்தமுறை வெளியேயுள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட திருமண மண்டப நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story