5 பேர் பலியான சென்னை ரயில் விபத்துக்கு என்ன காரணம்?


5 பேர் பலியான சென்னை ரயில் விபத்துக்கு என்ன காரணம்?
x
தினத்தந்தி 24 July 2018 6:59 AM GMT (Updated: 24 July 2018 6:59 AM GMT)

5 பேர் பலியான சென்னை ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த விவரம் தெரியவந்து உள்ளது. #TrainAccident

சென்னை

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பயணித்தனர். இருக்க இடம் கிடைக்காமல் பலர் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தனர்.

இந்நிலையில், பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிகொண்டிருந்தவர்கள் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த ரயில்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் வேலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். வழக்கம் போல இன்றும் அப்படியே இருந்தது ஆனால், கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே மின்சார ரயில் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி இன்று காலை அறுந்து விழுந்தது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கை யிலேயே ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. பரங்கிமலை அருகே வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் நிலைய கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதினர். இதில் தொங்கிக் கொண்டிருந்தவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள்  அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் 5 பேர் பலியாயினர். 

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கூடுதல் போலீஸ் ஆணையர் சாரங்கன் தலைமையில் வந்த போலீசார் விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே ஐஜி. வீரேந்திரகுமாரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பரங்கிமலையில் ரயில்வே தடுப்புச்சுவரை அகற்றுவதற்காக அளவிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story