தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் 18–ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்


தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் 18–ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2017 9:29 PM GMT (Updated: 12 April 2017 9:28 PM GMT)

தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் 18–ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பதவி நீக்கம்

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காட்டுத்தனமாக காவல் அதிகாரி பாண்டியராஜன் அவர்கள் தாக்கி இருக்கிறார். அந்தப் பெண்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய போது அவர்கள் விவரித்த நிகழ்வு எனது மனதை உருக்குவதாக இருந்தது.

அடி வாங்கிய ஒரு பெண்ணிற்கு காது கேட்கவில்லை. பல பெண்கள் உடல்களில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவிற்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவரின் சொந்த சகோதரியை போல் பார்க்க வேண்டிய பெண்களை அடித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களோடு போராடிய இளைஞர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு போடப்பட்டிருக்கிறது. அது வாபஸ் பெறப்பட வேண்டும். கைதானவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பாரதீய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். வரும் 18–ந் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிரதான மதுக்கடைகள் (டாஸ்மாக்) முன்பாக பாரதீய ஜனதா கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பு அற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக்கொண்டு, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story