எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக புகார்; சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தின் அடுத்த முதல் - அமைச்சர் யார் என்பதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியபோது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைக்கப்பட்டு இருக்கும் இந்த சொகுசு விடுதிக்குள் யாரும் நுழைய முடியாத நிலை நீடித்தது. சசிகலா அவ்வபோது அங்கு சென்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் இது அதிமுக தரப்பில் மறுக்கப்பட்டது. இப்போது வரையில் எம்.எல்.ஏ.க்கள் அங்குதான் உள்ளனர்.
கடந்த 13-ம் தேதி மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் இல்லத்திற்கு நேரில்வந்து, ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எம்.எல்.ஏ சரவணன், மாறுவேடத்தில் தப்பிவந்தேன் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் “ கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்தேன். கூவத்தூரில் தங்கியிருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் தப்பித்து வந்தேன். அடைத்து வைக்கப்பட்டதால் மனம், உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பன்னீர்செல்வம் தான் முதல்- அமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர். எனவே மேலும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பர். பேரவையில் வாக்கெடுப்பு நடத்தினால் அனைவரும் பன்னீர்செல்வத்தைதான் ஆதரிப்பர். மக்களும் பன்னீர் செல்வம் ஆட்சி செய்வதை தான் விரும்புகின்றனர்” என்றார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எம்எல்ஏக்களை கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆள்கடத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story