திருட்டுப்போன 201 செல்போன்கள் மீட்பு


திருட்டுப்போன 201 செல்போன்கள் மீட்பு
x

திருட்டுப்போன 201 செல்போன்கள் மீட்கப்பட்டன.

திருச்சி

செல்போன்கள்

திருச்சி மாநகரத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட்டுப் போன மற்றும் மாயமானதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்ட 2022-ம் ஆண்டில் 129 செல்போன்களும், நடப்பாண்டில் 72 செல்போன்களும் என மொத்தம் 201 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். இதில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை

நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பேசுகையில், பொதுமக்கள் தங்களது உைடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் அத்தியாவசியமாக உள்ளது. அனைத்து எண்கள், தகவல்களை அதில் சேகரித்து வைத்து இருப்பார்கள். அந்த செல்போன்களை பறிகொடுத்துவிட்டால் மனதளவில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிவிடுவார்கள். ஆகையால் தான் பொதுமக்கள் தரும் புகார்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து தவறவிட்ட செல்போன்களை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

தற்போது ரூ.32 லட்சம் மதிப்பிலான செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம். செல்போன்களை அஜாக்கிரதையாக வைத்து கொள்ளக்கூடாது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், குற்றங்களை தடுக்கும் வகையில் குடியிருப்பு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மாநகர் முழுவதும் குடியிருப்பு சங்கங்களை உருவாக்கி குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

பின்னர் போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நிருபர்களிடம் கூறுகையில், 'செல்போன்கள் மாயமானது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. போலி மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.


Next Story