அசோக்நகர் 100 அடி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
அசோக்நகர் 100 அடி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). இவர் அசோக்நகர் 100 அடி சாலை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 2 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறி திருடர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளின் எண் அடையாளம் காணப்பட்டது. அதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது சூளைமேடு கண்ணகி தெருவை சேர்ந்த ஆனந்த ஈஸ்வரன் (22), கோடம்பாக்கம் ஆண்டவன் நகர் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த குமரவேல் (22) என்பது தெரிய வந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.