பயணிகளிடம் நூதன முறையில் திருடிய 2 பெண்கள் போலீசில் சிக்கினர்


பயணிகளிடம் நூதன முறையில் திருடிய 2 பெண்கள் போலீசில் சிக்கினர்
x

பயணிகளிடம் நூதன முறையில் திருடிய 2 பெண்கள் போலீசில் சிக்கினர்.

திருச்சி

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ் நிலையத்தில்...

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி அன்புக்கரசி. இவர் கடந்த 8-ந்தேதி சென்னையில் இருந்து உடுமலைக்கு சென்றார். வழியில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வந்திறங்கிய அன்புக்கரசி, கழிவறைக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பெண்கள் வந்துள்ளனர்.

அவர்கள், தங்கள் பையை அன்புக்கரசியிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் அன்புக்கரசியிடம் தங்கள் பையை வாங்கிக்கொண்டனர். இதனால் அவர்களை நம்பிய அன்புக்கரசி, தனது பையை அந்த பெண்களிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.

பையுடன் மாயம்

அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த பெண்கள் அங்கு இல்லை. அவர்கள் அன்புக்கரசியின் பையுடன் மாயமாகி விட்டனர். அதில் 4½ பவுன் நகைகள், செல்போன், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து அன்புக்கரசி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறிகொடுத்த அன்புக்கரசி, அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர், நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து கண்காணித்தனர். அப்போது, அன்புக்கரசியிடம் நகையை திருடிச்சென்ற 2 பெண்களும் அங்கு சுற்றிக்கொண்டிருந்தனர்.

போலீசில் ஒப்படைப்பு

இதையடுத்து அந்த பெண்களை பிடித்து, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் நந்தினி(வயது 20), ராஜலட்சுமி(25) என்பதும், அவர்கள் மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகளிடம் நூதன முறையில் திருட்டில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story