காசிமேடு துறைமுகத்தில் பழுதடைந்த 2 பைபர் படகுகள் எரிந்து நாசம்


காசிமேடு துறைமுகத்தில் பழுதடைந்த 2 பைபர் படகுகள் எரிந்து நாசம்
x

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குப்பை கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதடைந்த 2 பைபர் படகுகள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை

தீ விபத்து

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் விற்பனை கூடம் அருகில் படகுகளின் உதிரி பாகங்கள், குப்பை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பழுதடைந்த விசைப்படகுகளும் நீண்ட நாட்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று திடீரென அந்த குப்பை கழிவுகளில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி படகுகளின் உதிரிப்பாகங்கள், பழுதடைந்து நிறுத்தி இருந்த பைபர் படகுகள், தெர்மாகோல்கள், குப்பைகள் என மொத்தமாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் ஏற்பட்டது.

2 பைபர் படகுகள் நாசம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் அங்கு நிறுத்தி இருந்த 2 பழுதடைந்த பைபர் படகுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story