நெல்லை: தாய் கண் முன்னே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது..!


நெல்லை: தாய் கண் முன்னே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது..!
x
தினத்தந்தி 1 Oct 2022 1:55 PM GMT (Updated: 1 Oct 2022 1:56 PM GMT)

தாமிரபரணி ஆற்றை சுற்றி பார்க்க சென்ற சிறுமி தவறி விழுந்த நிலையில் அதனை மீட்க 7 மாத குழந்தையுடன் ஆற்றில் குதித்து தேடிய நிலையில் இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தது

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கண்ணன் (32) இவர் நெல்லை டவுன் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் (30) என்ற மனைவியும் மாதுரி தேவி (4), நிரஞ்சனி என்ற ஏழு மாத குழந்தையும் உள்ளது. கண்ணன் தனது தந்தை சந்திரசேகர் தாய் சிவகாமி சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை மாதுரி தேவி தாமிரபரணி ஆற்றிணை பார்க்க வேண்டும் என தாய் மாரியம்மாளிடம் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மாரியம்மாள் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆட்டோவில் சுத்தமல்லி அணைக்கட்டினை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து அணைக்கட்டு பகுதியில் ஆற்றினை பார்த்தவாறு சென்றபோது மாதுரி தேவி நிலை தடுமாறி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு பதறிய தாய் தனது 7 மாத கைக்குழந்தையான நிரஞ்சனியுடன் ஆற்றில் குதித்து நீரீல் மூழ்கி தேடிய நிலையில் நிரஞ்சனா நீரில் மூழ்கியதில் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார். மாதுரி தேவியை தொடர்ந்து தேடியும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் இது குறித்து பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரிகள் வரதராஜ், முத்தையா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர தேர்தல் முயற்சியில் சிறுமி மாதுரிதேவி சுத்தமல்லி அணைக்கட்டு மதகின் அருகே 100 மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உடலை கைப்பற்றிய சுத்தமல்லி போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயார் மாரியம்மாள் புகாரின் பேரில் வழக்கு பதிந்த சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆற்றினை பார்க்க தாயுடன் சென்ற சிறுமி தவறி விழுந்த நிலையில் அதனை மீட்க 7 மாத குழந்தையுடன் ஆற்றில் குதித்து தேடிய நிலையில் இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story