பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,206 பேர் எழுதினர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,206 பேர் எழுதினர். 1,348 பேர் தேர்வு எழுத வரவில்லை.

புதுக்கோட்டை

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் பாடத்துடன் நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 97 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

தேர்வெழுத செல்லும் தங்களது மகன், மகள்களை பெற்றோர் ஆசீர்வதித்து, வாழ்த்தி அனுப்பினர். மேலும் பள்ளிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகளை வாழ்த்தி தேர்வு மையத்திற்குள் அனுப்பினர். மாணவ-மாணவிகளும் ஒருவருக்கொருவர் வாழத்துகளை பரிமாறி கொண்டனர். புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் கைகொடுத்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்தை பரிமாறினர்.

1,348 பேர் தேர்வு எழுதவில்லை

மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவர்கள் 9 ஆயிரத்து 758 பேரில் 8 ஆயிரத்து 903 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 796 பேரில் 10 ஆயிரத்து 303 பேரும் என மொத்தம் 19 ஆயிரத்து 206 பேர் எழுதினர். மாணவர்கள் 858 பேரும், மாணவிகள் 490 பேரும் என மொத்தம் 1,348 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தேர்வு மற்றும் தேர்வு மையம் தொடர்பாக புகார் அளிக்க வசதியாக புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. பார்வையற்றவர்கள் மற்றும் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகள் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பிளஸ்-1 தேர்வு இன்று தொடக்கம்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு முடிவடைந்த பின் விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக விடைத்தாள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து ஆங்கில பாடத்தேர்வு நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதியுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைகிறது.

இதற்கிடையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி நிறைவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி நிறைவடைகிறது.


Next Story