பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 13 குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம்


தோகைமலையில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 13 குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரூர்

பள்ளி விடுமுறை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் ஒன்றாக விளையாடுவது வழக்கம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று நண்பகல் 12 மணியளவில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நூடுல்ஸ் செய்ய முடிவு செய்தனர். இதற்காக தோகைமலை பகுதியில் உள்ள மளிகை கடையில் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கினர்.

பின்னர் பெருமாள் என்பவரின் தோட்டத்தின் அருகே சமைத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை நல்லெண்ணெய் என்று நினைத்து அதனை நூடுல்சில் ஊற்றி கிளறி உள்ளனர்.

15 பேருக்கு வாந்தி-மயக்கம்

பின்னர் சிறுவர்-சிறுமிகள் அந்த நூடுல்சை சாப்பிட்டுள்ளனர். சிலர் தங்களது வீட்டுக்கு எடுத்து சென்று சாப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் நூடுல்ஸ் சாப்பிட்ட கதிர்வேல் என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 8), வேலு என்பவரின் மகள் சுபஸ்ரீ (6), வேலுச்சாமி என்பவரின் மகள் சத்யா (16), குழந்தைவேல் மகள் அபிநயா (16), கந்தசாமி மகன் சாந்தாகிருஷ்ணன் (10), பெருமாள் மகன் கார்த்திக் (13), நல்ல பெருமாள் மகள் யுவஸ்ரீ (8), ஆறுமுகம் மகள் நிவேதா (13), வேலுச்சாமி மகன் தீஸ்சாந்து (12), பெருமாள் மகள் உமாமகேஸ்வரி (18), பழனிச்சாமி மகள் கலையரசி (15), குழந்தைவேல் மனைவி நவமணி (38), மகன் ராமகிருஷ்ணன் (14), மகள் மகாலட்சுமி (13), கந்தசாமி மகள் அகல்யா (21) ஆகியோருக்கு மாலை 5 மணியளவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உள்பட 15 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு தோகைமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தோகைமலை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story