நத்தம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்


நத்தம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்
x

நத்தம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிகட்டு நடந்தது. இதனை, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் சுகந்தி முன்னிலை வகித்தார்.

முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில், ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

409 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 409 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. தகுதி இல்லாத 10 காளைகள் வெளியேற்றப்பட்டன. மொத்தம் 6 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டில் 269 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த முரட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்கி கொண்டன. திமிலை பிடித்தபோது சில காளைகள் திமிறி கொண்டு வீரர்களை பந்தாடியது. அந்தவகையில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மதுரை கொடிமங்கலம் லட்சுமணன்(22), மேட்டுப்பட்டி விஜய அரசன்(28), மதுரை நவீன்குமார்(25) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

இவர்களுக்கு, அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசுகள்

காளைகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.

ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story