ஊருணியை ஆக்கிரமித்து கட்டிய 15 கட்டிடங்கள் அகற்றம்


ஊருணியை ஆக்கிரமித்து கட்டிய 15 கட்டிடங்கள் அகற்றம்
x

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15 கட்டிடங்களை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15 கட்டிடங்களை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

பொத்துமரத்து ஊருணி

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தனர். இதில் 82 கட்டிடங்கள் இருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 9 கடைகள் மட்டும் அகற்றப்பட்டது.

மக்கள் எதிர்ப்பு

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வந்த 43 பேருக்கு மட்டும் எம்.புதுப்பட்டி அருகில் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அங்கேயே வசிக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டு கஞ்சி தொட்டி திறந்து போராடினர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலைச்சிறுத்தைகள், புராட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

அகற்றம்

இந்தநிலையில் தாசில்தார் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஊருணியையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்வதாக உறுதி அளித்தனர்.

அதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வணிகநோகத்தில் செயல்பட்டு வந்த 13 கட்டிங்கள் உள்ளிட்ட 15 கட்டிடங்களின் மின் இணைப்பு நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்டது. அந்த கட்டிடங்களை நேற்று காலை அதிகாரிகள் மணல் அள்ளும் எந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். அப்போது சிவகாசி துணை போலீஸ்சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story