13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
13-ம் நூற்றாண்டை சேர்ந்த போசள மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த போசள மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன், ஆய்வு மாணவர் பொ.சரவணன் ஆகியோர் மடவாளம் கிராமத்தில் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆ.பிரபு கூறியதாவது:-
கல்வெட்டு
மடவாளம் ஏரியின் கீழ்ப்புறம் உள்ள வயல் வெளியில் இயற்கையாக அமைந்த பாறையின் முகப்பில் 10-க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்து வரிகளைக் கொண்ட பழமையான கல்வெட்டு இருப்பதைக் கண்டு, கல்வெட்டை சுத்தம் செய்து மாவுப்பூச்சு வாயிலாகப் படியெடுத்து வாசிக்க முற்பட்டோம். போதிய பாதுகாப்பின்றி புதர் மண்டிய நிலையில் உள்ள இயற்கையான பாறை என்பதால் எழுத்துக்கள் சற்று சிதைந்து பொருள் கொள்ள முடியாத சூழலில் இருந்தது.
இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமிழகத்தின் முதுபெரும் கல்வெட்டு ஆய்வாளர் ராசகோபாலிடம் அனுப்பி கல்வெட்டு செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டது. பாறையின் ஒரு முகப்பில் கல்வெட்டும், மறுமுகப்பில் அழகிய சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டே இக்கல்வெட்டு கொடைச் செய்தியை விவரிக்கும் சூலக்கல் கல்வெட்டு என்பதை அறியமுடிகின்றது.
போசள மன்னர்காலம்
இக்கல்வெட்டு, போசள மன்னர்களில் ஒருவரான வீரராமநாதனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகும். இம்மன்னர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள குந்தாணியை தலைநகராகக் கொண்டும், திருச்சிராப்பள்ளியை அடுத்த கண்ணூரை (இன்றைய சமயபுரம்) படைத்தளமாக கொண்டும் அட்சி செய்த மன்னராவார். இவரது காலம் கி.பி. 1254 - 1295 ஆகும். மடவாளத்தில் உள்ள இக்கல்வெட்டு இம்மன்னரது ஐந்தாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டதாகும்.
வீரராமநாதனின் படைத்தளபதியாக விளங்கியவரும், மாடப்பள்ளி பகுதியின் பிரதானியுமான வல்லாள தண்ணாக்கன் இக்கல்வெட்டினை பொறித்துள்ளார். அவரது ஆணைப்படி, இவ்வூர் ஏரிப்பாசனத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட அளவு நிலத்தினை விதைத்து மாடப்பள்ளியில் உள்ள சிவன் கோவில் இறை காரியங்களுக்கு செலவிட கொடையாகக் கொடுத்த செய்தியை விவரிக்கின்றது. மாடப்பள்ளி சிவன் கோவில் என்பது மடவாளம் அங்கநாதீஸ்வரர் கோவிலாக இருக்கக்கூடும். இக்கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.