ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்


ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 22 Sep 2023 8:30 PM GMT (Updated: 22 Sep 2023 8:30 PM GMT)

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்.

எண்ணும், எழுத்தும்...

தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதனால் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் முதல் பருவ தேர்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் செல்போன் மூலம் எமிஸ் செயலியில் வினாக்கள் கொடுக்கப்படும்.

பதிவேற்றம்

ஒவ்வொரு குழந்தைகளாக வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு பாடம் முடிந்த பிறகு அடுத்த பாடத்திற்கான தேர்வுகள் நடத்தப்படும்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 2,700 பேரும், வடக்கில் 1,500 பேரும், ஆனைமலையில் 2,600 பேரும், வால்பாறையில் 800 பேரும், கிணத்துக்கடவில் 1,500 பேரும், மதுக்கரையில் 2,350 பேரும், சுல்தான்பேட்டையில் 1,400 பேரும் சேர்த்து பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 12,850 மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதி வருகின்றனர்.

தாமதம்

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் 3 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்தான் உள்ளார். ஒவ்வொரு மாணவராக பதில் கூற வேண்டி உள்ளதால் தாமதம் ஆகிறது. இதனால் ஒரு சில தேர்வுகள் 2 நாட்கள் வரை நடக்கிறது. மேலும் செயலியில் ஒருமுறைதான் வினா திரையில் வரும் என்பதால், பதில் தெரிந்த வினாவுக்கு விடை அளித்துவிட்டு பதில் தெரியாத வினாவுக்கு யோசித்து சிறிது நேரம் கழித்து பதில் கூற முடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை களைய வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story