12 கோவில் உற்சவ மூர்த்திகள் அலங்கார தேர்பவனி


12 கோவில் உற்சவ மூர்த்திகள் அலங்கார தேர்பவனி
x
தினத்தந்தி 6 Oct 2022 7:30 PM GMT (Updated: 6 Oct 2022 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு 12 கோவில் உற்சவ மூர்த்திகள் அலங்கார தேர்பவனி நடந்தது.

நவராத்திரி நிறைவு விழா

கிருஷ்ணகிரியில், நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து விழா கொண்டாப்பட்டது. இதன் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு பழையப்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில், ராமர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், சோமேஸ்வரர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞான விநாயகர் கோவில், கல்கத்தா காளிக் கோவில் என 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் பவனி சென்றது.

வன்னிமரம் வெட்டும் நிகழ்ச்சி

அனைத்து தேர்களும் நேற்று காலை பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம் என்பதால், இலைகளைப் பெற கூட்டம் அலைமோதியது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story