10-ம் நூற்றாண்டு வணிகக்குழு கல்வெட்டு கண்டெடுப்பு


10-ம் நூற்றாண்டு வணிகக்குழு கல்வெட்டு கண்டெடுப்பு
x

10-ம் நூற்றாண்டு வணிகக்குழு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே தன்னாங்குடி, பிலிப்பட்டி கிராமத்தில், தனியார் வயலில் கல்வெட்டு நடப்பட்டிருப்பதை கண்ட அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" குழுவினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அந்தக்குழுவினர் கல்வெட்டை முறைப்படி படியெடுத்தனர். இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த கல்வெட்டு கி.பி.984-ல் (உத்தமசோழன் காலம்) வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் முன்புறம் வணிகக் குழுவினர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்கு வரும் காவல் குடியினரின் சின்னங்களான திரிசூலம், அரிவாள், குத்து வாள், வளரி, அங்குசம், சிவிகை, வெண்குடை, கோடரி, குத்து விளக்கு போன்ற சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. பலவகை குழுக்கள் ஒன்றிணைந்து வணிகம் நடத்தியிருப்பதை இந்தக் கல்வெட்டு உணர்த்துகிறது. இதில் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற வணிகக் குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுக்கள் சோழர் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் வணிகம் செய்த மிகப் பெரிய வணிகக் குழுவினர் ஆவர்.

மங்களநாட்டு ஐநூற்றுவர் (திருவாரூர் அருகேயுள்ள பகுதி), புறமலைநாட்டு ஐநூற்றுவர் (தருமபுரி பகுதி), பூங்குன்ற நாட்டு ஐநூற்றுவர் (சிவகங்கை அருகேயுள்ள பகுதி), மணலூர் நாட்டு ஐநூற்றுவர் (காங்கேயம் அருகேயுள்ள பகுதி), கொடும்பாளூர் வீரப்பட்டின ஐநூற்றுவர் மற்றும் வளஞ்சியர் எனும் வணிகக் குழுவினர் இணைந்து வணிகம் செய்ததை இந்தக் கல்வெட்டு கூறுகிறது.

இதில் வரும் கொடும்பாளூர் ஐநூற்றுவர் குழு, கொடும்பாளூர் அருகேயுள்ள ஒரு ஊருணியில் உள்ள மடைத்தூணை சீரமைத்ததை இந்தக்கல்வெட்டு சான்றளிக்கிறது. தொடர்ந்து, 500 ஆண்டுகள் அந்தக்குழு இயங்கி வந்தது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. இந்தக் குழுவினருக்கு பகையாய் உள்ளவர்களின் வம்சம் குறித்து வசைசொற்களை கூறுவதாய் இறுதிப் பகுதி அமைந்துள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளதன் காரணமாக முழுமையான தகவல்களை அறிய முடியவில்லை. சேர, சோழ, கொங்கு, பாண்டிய, தகடூர் ஆகிய அனைத்து மண்டல வணிகக்குழுக்களும் ஒன்றிணைந்து இருந்ததை இந்தக்கல் வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இதில் வணிகர்களுக்கு காவலாக வளரிப்படையினரும், அத்திகோசத்தார் எனும் யானைப் படையினரும் சென்றிருந்ததை கல்வெட்டின் முன்பகுதியிலுள்ள அங்குசம், வளரி போன்ற சின்னங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இ்வ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story