100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுக்காலனி, கீழப்புலியூர் சிலோன் காலனி மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி அவர்கள் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று பி.ஐ.பி.-எச்.எச். முத்திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் அடையாள அட்டையில் அந்த முத்திரையிடப்படவில்லை.

முத்திரையிட நடவடிக்கை

வசதி படைத்த தொழிலாளர்களுக்கு அந்த முத்திரையிடப்பட்டு வருகிறது. மேலும் எங்களுக்கு வேலை சரியாக வழங்கப்படுவதும் இல்லை. அந்த முத்திரை இருந்தால் தான் வேலை சரியாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் அந்த முத்திரையிட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து எங்களுக்கும் அடையாள அட்டையில் அந்த முத்திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்து கலைந்து சென்றனர்.

சமத்துவபுரம் மக்கள் மனு

ஆலத்தூர் தாலுகா, காரை சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுக்களில், நாங்கள் வசிக்கும் வீடுகளில் மேற்கொண்ட பழுது நீக்கும் பணிக்கு மற்ற சமத்துவபுரங்களில் வழங்கியது போல் தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். தொகை வழங்கப்படாத 9 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் தொகை வழங்கப்பட வேண்டும். 100 நாள் வேலையில் முறையான ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல அமைப்பு செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான சி.எம்.சின்னசாமி தலைமையில், அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவான வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

446 மனுக்கள்

கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 446 மனுக்களை பெற்றார். முன்னதாக அவர் மகளிர் திட்டத்தின் சார்பில் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 42 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு உணவகம், தையலகம், காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு வகையான சுயதொழில் தொடங்கும் வகையில் ரூ.16 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 'சாரல்' சுயஉதவிக்குழுவினர் ஆயத்த ஆடையக உற்பத்திக்கான கருவிகள் வாங்க ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையினையும், வருவாய் துறையின் சார்பில், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் கல்லாற்றில் மூழ்கி இறந்து போன 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.


Next Story