100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் மனு அளிக்க திரண்டு வந்தனர்


100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் மனு அளிக்க திரண்டு வந்தனர்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

புதுக்கோட்டை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி-வைகை-குண்டாறு திட்ட மாவட்ட வருவாய் அதிகாரி ரம்யா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி, சிவப்பட்டி, தாவூதுமில், முல்லைநகர் பகுதியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் மனு தொடர்பாக கூறுகையில், 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையில் சிலருக்கு முத்திரையிடுவதாகவும், அவர்களுக்கு வேலை தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு அடையாள அட்டையில் முத்திரையிடப்படவில்லை எனவும், மேலும் வேலையும் சரிவர கொடுப்பதில்லை எனவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

414 மனுக்கள் பெறப்பட்டன

இதேபோல ஆவுடையார்கோவில் அருகே கோதைமங்களம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, மராமத்து பணி செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல விராலிமலை தாலுகா கொடும்பாளூரை சேர்ந்த செல்வராஜ், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மனு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னை கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கூறிய மனுவிலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 414 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story