வங்கி உதவி மேலாளரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி


வங்கி உதவி மேலாளரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வங்கி உதவி மேலாளரிடம் ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

வங்கி உதவி மேலாளர்

விழுப்புரம் அருகே அய்யூர்அகரத்தை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 28). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மணிமாறனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் பகுதிநேர வேலை எனக்கூறி குறுந்தகவலை அனுப்பினார். மேலும் அந்த நபர், தான் அனுப்பும் ஓட்டலின் புகைப்படத்துக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார். உடனே அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.150-ஐ மணிமாறன் பெற்றார். பின்னர் டெலிகிராம் மூலம் மணிமாறனை தொடர்புகொண்ட நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறியுள்ளார்.

ரூ.1¼ லட்சம் மோசடி

இதை நம்பிய மணிமாறன், அந்த லிங்கிற்குள் சென்று தனக்கான பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார். பின்னர் ரூ.2 ஆயிரத்தை அனுப்பி ரூ.2,800 ஆக திரும்பப்பெற்றார். அதன் பிறகு தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை 3 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், டாஸ்க் முடித்த பின்னரும் மணிமாறனுக்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தராமல் அவரை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story