வீடுகளில் பாம்புகள் உலவும் வினோத கிராமம்
பாம்புகளை கண்டால் ஒருவித பயமும், பதற்றமும் பலரையும் தொற்றிக்கொள்ளும். அவற்றை தொந்தரவு செய்யாவிட்டால் எந்த கேடும் விளைவிக்காது என்பார்கள். குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளை விரட்டும்போது அவை தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கடித்துவிடுவதுண்டு. பாம்புகள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
அதற்கு மாறாக வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் பாம்புகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் ஒரு கிராமமே பாம்புகளை வளர்க்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பாம்புகள் சர்வ சாதாரணமாக உலவுகின்றன. செல்லப்பிராணிகளுக்கு கூண்டு வைத்து பராமரிப்பது போல் பாம்புகளுக்கு வீட்டின் மூலையில் தனி இடம் ஒதுக்கிவிடுகிறார்கள்.
அந்த வினோத கிராமம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள மொஹோல் தாலுகாவில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் வசிப்பவர்கள் பாம்புகளை வணங்குவது மட்டுமல்லாமல், எந்த பயமும் இல்லாமல் அவற்றுடன் வசிக்கிறார்கள்.
புனேவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 2,600 பேர் வசிக்கிறார்கள். இங்கு இதுவரை பாம்புக்கடி சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. பாம்புகளை விரும்பும் எவரும் எங்கள் கிராமத்திற்கு பயப் படாமல் வரலாம் என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள். பாம்பு களுக்கு பால் அல்லது முட்டை வழங்கிவிட்டு செல்லலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். விஷ ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் விருந்தாளியாக வரவேற்கப் படுகின்றன. அவை கிராமத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
ஷெட்பால் கிராமத்தில் வசிப்பவர்கள் பாம்புகளை தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளாகவே கருதுகிறார்கள். குழந்தைகள் கூட பாம்புகளை பார்த்து பயம் கொள்வதில்லை. அவர்களின் முன்னிலையில் வளர்க்கப்படுவதால் அவற்றுடன் விளையாடுவதற்கும் பழகி விடுகிறார்கள். பள்ளிக்கூடம் செல்லும்போதும் பாம்புகள் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றன. அந்த அளவுக்கு பாம்புகளுடன் பாசமாக பழகுகிறார்கள்.
அங்குள்ள வீடுகளில் பாம்புகளுக்கு தனி இடம் இருக்கிறது. வீட்டின் ஒரு மூலையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாகப்பாம்புகளும் எந்நேரமும் வீட்டிற்கு வந்து செல்கின்றன. புதிதாக வீடு கட்டும்போதே பாம்புகள் வசிப்பதற்காக பிரத்யேக கட்டமைப்புகளை ஏற் படுத்துகிறார்கள். வீட்டில் உருவாக்கப்படும் இந்த சிறப்பு மூலை, தேவஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமியன்று, கிராம மக்கள் பாம்புகளை வணங்கி, சிறப்பு பூஜை செய்கிறார்கள்.