105 வயது மூதாட்டியின் ஓட்டப்பந்தய சாதனை


105 வயது மூதாட்டியின் ஓட்டப்பந்தய சாதனை
x

ஹரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி ராம்பாய் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பந்தய தூரத்தை 45.40 வினாடிகளில் ஓடி அசத்தி இருக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த நிகழ்வு அரங்கேறியது.

அனைத்து வயது தரப்பினருக்கும் நடத்தப்பட்ட போட்டியில் 85 வயதுக்கு மேல் போட்டியாளர் யாரும் இல்லை. 100 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ராம்பாய் மட்டுமே பங்கேற்றார். தனியொரு பெண்மணியாக ரம்பாய் ஓட தொடங்கியதுமே ஒட்டுமொத்த அரங்கமும் அவரை உற்சாகப் படுத்தியது.

ராம்பாய், ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரியில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர். 100 மீட்டர் ஓட்ட பந்தயம் மட்டுமின்றி 200 மீட்டர் பந்தயத்திலும் பங்கேற்றார். 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தையும் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் இரண்டு தங்க பதக்கங்களை தன் வசப்படுத்திவிட்டார்.

101 வயதான மன் கவுர் உலக மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 74 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றதே சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையை ரம்பாய் முறியடித்திருக்கிறார்.

''என் பாட்டி இந்த போட்டியில் பங்கேற்பதில் உறுதியாக இருந்தார். ஆரம்பத்தில், அவருடைய முதுமையை நினைத்து கொஞ்சம் கவலைப்பட்டோம். ஆனால் அவர் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்ததால் நாங்களும் நம்பிக்கையுடன் இருந்தோம்'' என்கிறார் ராம்பாயின் பேத்தி ஷர்மிளா சங்வான்.

இது ராம்பாய் பெறும் முதல் வெற்றி அல்ல. "எனது பாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலாக வாரணாசியில் நடந்த போட்டியில் பங்கேற்றார். பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்" என்கிறார், ஷர்மிளா.

தனது பாட்டியின் உடல் ஆரோக்கிய ரகசியத்தை குறிப்பிடுபவர், "என் பாட்டி அதிகாலையில் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் ஜாக்கிங் செல்வார். வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்து விடுவார். எங்கள் பண்ணையில் தினமும் வேலை செய்கிறார். சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வார். தினமும் 250 கிராம் நெய் மற்றும் 500 கிராம் தயிர் சாப்பிடுவார். ஒரு நாளைக்கு இரண்டு முறை 500 மி.லி பால் பருகுவார். தினை வகை ரொட்டியை விரும்பி சாப்பிடுவார். அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுவதில்லை'' என்றும் கூறுகிறார்.

ராம்பாய் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் விரும்புகிறார். "என் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாடு சென்று போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன்" என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.


Next Story