கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்த நாள் இன்று..!


கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்த நாள் இன்று..!
x
தினத்தந்தி 11 Jun 2022 12:50 PM GMT (Updated: 11 Jun 2022 12:52 PM GMT)

1975 ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய அணி ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

1975 ஆம் ஆண்டு இதே நாளில், கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

1975 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கிழக்கு ஆப்பிரிக்காவை இந்தியா இதே நாளில் தோற்கடித்தது. இது இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் பெற்ற முதல் வெற்றியாகும். ஜூன் 11, 1975 அன்று இந்திய அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த நாள் ஆக மாறியது.

முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 1975இல் பிரிட்டனில் நடைபெற்றது. 1975 உலகக் கோப்பையில் இந்தியா உட்பட மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா ஒரு அனுபவமற்ற அணியாக பங்கேற்றது.

1975 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், இந்தியாவை 202 ரன்கள் வித்தியாசத்தில் த்ரீ லயன்ஸ் அணி தோற்கடித்தது.

இருப்பினும், சீனிவாசராகவன் வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அவர்கள் லீட்ஸ் ஹெட்டிங்க்லீ மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில், கிழக்கு ஆப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

அந்த போட்டியில், டாஸ் வென்ற கிழக்கு ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு அரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சையத் அபித் அலி மற்றும் மதன் லால் ஆகியோர் 5 பேட்ஸ்மென்களையும் அவுட் செய்து, அந்த அணியின் டாப்-ஆர்டரை நிலைகுலைய செய்தனர்.

மொத்தம் 60 ஓவர்கள் கொண்ட ஒரு இன்னிங்சில், ஒரு பந்துவீச்சாளர் 12 ஓவர்கள் பந்து வீசலாம். இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி மொத்தம் 12 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

மறுமுனையில், மதன் லால் 3 விக்கெட்டுகளையும், சையத் அபித் அலி 2 விக்கெட்டுகளையும், வலது கை பந்து வீச்சாளர் மொஹிந்தர் அமர்நாத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கிழக்கு ஆப்பிரிக்கா அணியை 120 ரன்களுக்கு சுருண்டது.


இதனை தொடர்ந்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் கவாஸ்கரும், பரோக் இன்ஜினியரும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

சுனில் கவாஸ்கர் 86 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 65* ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் பரோக் இன்ஜினியர் 93 பந்துகளில் 54* ரன்கள் எடுத்தார்.

இதன்காரணமாக, 29.5 ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்து, வெற்றி இலக்கை சுலபமாக எட்டியது. இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

பேட்டிங்கில் அரைசதம் மற்றும் விக்கெட்கீப்பிங்கில் அசாத்தியமாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு உதவிய பரோக் இன்ஜினியர் ஆட்டநாயகனாக தேர்வானார். எனினும், அப்போதைய கத்துக்குட்டி அணியான இந்தியா, அந்த உலகக்கோப்பை தொடரில் பெற்ற ஒரே வெற்றி இது மட்டுமே. மற்ற அனைத்து போட்டிகளிலும் தோற்று, தொடரை விட்டு பரிதாபமாக வெளியேறியது.

அதனை தொடர்ந்து, 1983 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது, என கிரிக்கெட்டில், இந்திய அணியின் சாதனை வானளாவ விரிவடைந்து, இன்று எதிர் அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது.

இன்றைய சூழலில் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இந்தியா திகழ, அன்று தொடங்கிய இந்தியாவின் வெற்றிப்பயணம் மிக முக்கிய காரணம் ஆகும்.


Next Story