8,236 கி.மீ.. 7 மாதங்கள்.. விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்ட ஜோடி


8,236 கி.மீ.. 7 மாதங்கள்.. விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்ட ஜோடி
x

விழிப்புணர்வு நடை பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்கள், பென்னி கொட்டாரதில் - மோலி ஜோடி.

நாட்டின் கடைக்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சாகச பயணங்கள் மேற்கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். அத்தகைய நீண்ட தூர பயணத்தை விழிப்புணர்வு பயணங்களாக மாற்றிவிடவும் செய்வார்கள்.

பெரும்பாலும் சைக்கிள், இரு சக்கர வாகனம், கார் போன்றவற்றின் உதவியுடன்தான் பயணங்களை தொடர்வார்கள். நடை பயணம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் தம்பதி சகிதமாக நடை பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்கள், பென்னி கொட்டாரதில் - மோலி ஜோடி.

கணவன் - மனைவியான இவர்கள் இருவரும் கேரள மாநிலத் திலுள்ள கோட்டயத்தை சேர்ந்தவர்கள். ஆசிரியர்களான இருவரும் ஆந்திராவில் 15 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணி புரிந்திருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவர்களின் வேலை பறி போனது. இதையடுத்து தங்களின் சொந்த ஊரான கோட்டயத்துக்கு திரும்பி இருக்கிறார்கள்.

அங்கு இருவருக்கும் பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தை வழி நடத்துவதற்காக பென்னி மருத்துவமனை ஒன்றில் காவலாளியாக பணி புரிந்திருக்கிறார். அங்கு சிகிச்சை பெற வருபவர்களில் பலர் இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். இளைஞர்கள் பலரும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் நிகழ்வும் நடந்தேறி இருக்கிறது. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதுதான் பல மரணங்கள் நிகழ்வதற்கு காரணம் என்பதை அறிந்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கோடு விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலாக சைக்கிள் பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சைக்கிள் ஓட்டி அசத்தினார். 13 மாநிலங்கள் வழியாக கடந்து 58 நாட்களில் வெற்றிகரமாக பயணத்தை முடித்தார். பின்பு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது இரண்டாவது பயணத்தை தொடங்கினார். அவரது பயணம் பூட்டான், நேபாளம் என நீண்டது.

பென்னி மேற்கொண்ட தனிமை பயணம் அவருக்கு ஆத்ம திருப்தியை கொடுத்தது. செல்லும் வழியில் உடல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தன்னுடைய விழிப்புணர்வு பயணத்தில் மனைவியும் இணைய வேண்டும் என்று விரும்பினார். தன் விருப்பத்தை மோலியிடம் தெரிவிக்க, அவரும் சம்மதித்துவிட்டார். ஏற்கனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணித்த அனுபவம் பென்னிக்கு இருந்ததால் அந்த வழித்தடத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

இந்த முறை நடைபயணமாக செல்ல தீர்மானித்தார்கள். அதன்படி 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்கள். 17 மாநிலங்கள் வழியாக நடந்து சென்று டெல்லியை அடைந்தார்கள். இவர்களின் நடை பயணம் சுமார் ஏழு மாதங்கள் நீடித் திருக்கிறது.

தங்களின் முழு பயணத்தையும் யூடியூப் சேனலில் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். நடை பயிற்சி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் என்றும் சொல்கிறார்கள்.

''மனதுக்கு பிடித்தமானவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் பயணம் செய்வது உற்சாகம் அளிக்கும். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது உறவு புத்துயிர் பெற உதவும். பயணங்கள் உறவுகளுக்குள் நெருக்கத்தையும் ஏற்படுத்தும்'' என்கிறார், பென்னி.

இந்த நடை பயணத்தின்போது பணப்பற்றாக்குறை நிலவி இருக்கிறது. நண்பர்களிடம் கடன் வாங்கியும், நகையை அடமானம் வைத்தும் பயண செலவுகளை சமாளித்திருக்கிறார்கள். ஓட்டல்களில் தங்குவதற்கு பதிலாக கோவில்களில் தூங்குவது, கல்லறையில் கூடாரம் அமைத்து தங்குவது என செலவுகளை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். பயணத்தின் மீதான ஆர்வமும், தம்பதிகளிடையே நிலவும் அன்னியோன்யமும் பயணத்தை இனிமையாக்கிவிட்டது.


Next Story