பறக்கும் எலெக்ட்ரிக் கார்


பறக்கும் எலெக்ட்ரிக் கார்
x

இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் வாகனத்தை வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனம், பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்கும் வகையில் மின்சார வாகனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனம் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளின் மேல் பறந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் நகர மயமாக்கல் அதிகரித்து மக்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்குச் செல்கின்றனர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

உலகின் பெரு நகரங்களில் மக்கள் பயணங்களை மேற்கொள்ள நாள்தோறும் பலமணி நேரம் செலவிடுகின்றனர். இதனால், பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதற்கு மாற்று ஏற்பாடாக பறக்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாக உள்ளன. அந்தவகையில், இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் வாகனத்தை வடிவமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முதற்கட்டமாக சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் இந்த பறக்கும் வாகனம், இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

ஏர் எனும் புத்தாக்க நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த பறக்கும் வாகனத்தில், ஒரே சமயத்தில் இரண்டு பேர் பயணம் செய்ய முடியும். இருவரில் ஒருவர் வாகனத்தை இயக்குவார், மற்றொருவர் பயணிப்பார்.

முழு சார்ஜ் செய்தால் இந்த பறக்கும் கார் 100 மைல், அதாவது 160 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற வாகனத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாகன பயன்பாட்டு முறை காலப்போக்கில் பொதுவான ஒன்றாக மாறும் என ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர் தெரிவித்து இருக்கிறது.

"இது மிக முக்கிய மைல்கல். நாங்கள் போக்குவரத்து முறையில் முன்னேறி இருக்கிறோம். இதன் மூலம் ஏர் ஒன் மாதிரியை அதிக உற்பத்தி செய்யும் இலக்கை அடைய நெருங்கி விட்டோம்'' என ஏர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வந்தால், உலக அளவில் போக்குவரத்து துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என்பதில் வியப் பில்லை.


Next Story