சிறந்த உணவுகள் பட்டியலில்... இந்தியாவிற்கு இடம் உண்டா...?
2022-ல் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலை, பிரபல உணவு இணைய தளம் ஒன்று வெளியிட்டு, உணவு பிரியர்கள் நாவிற்கு ருசி கூட்டி இருக்கிறது.
எந்தக் கடைகளில் என்ன உணவுகள் புகழ்பெற்றவை என 450 இடங்கள் குறிப்பிட்டுள்ளன. கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய் பூண்டு நான், கீமா ஆகியவை முதலிடம் பிடித்த உணவுகளாக உள்ளன.
மனித இனம் தோன்றிய நாளில் இருந்து உணவு என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது. காய்கறி, பழங்கள், இறைச்சியை பச்சையாக உண்டு வந்த மனிதனுக்கு, நெருப்பு கண்டுபிடிப்பு புதிய வழியை காட்டியது.
சமைத்து உண்ணத் தொடங்கிய உடன், சுவைக்கான தேடல் அதிகரிக்க, இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு உணவு வகைகள் மாறுபடத் தொடங்கின.
21-ம் நூற்றாண்டில் உணவு வகைகள் மிகப்பெரிய அளவில் விரிந்து பரவி, வர்த்தகத்திற்கும் முக்கிய காரணியாக திகழ்ந்து வருகிறது. உணவுக் கடைகள் இல்லாத குக்கிராமங்கள் கூட கிடையாது என்பதே உண்மை.
பாரம்பரிய உணவுகளை தேடி அந்தந்த பகுதிக்கு சென்று சாப்பிடுபவர்கள் அதிகரித்து விட்டனர். எங்கு சென்றால், என்ன உணவு கிடைக்கும்?, எந்தெந்த நாடுகளின் பாரம்பரிய உணவுகள் சிறப்பானவை என்ற தேடலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் 2022-ல் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலை, பிரபல உணவு இணைய தளம் ஒன்று வெளியிட்டு, உணவு பிரியர்கள் நாவிற்கு ருசி கூட்டி இருக்கிறது.
95 நாடுகளின் உணவு பட்டியல்கள் அலசப்பட்டு, உணவு வகைகள் ருசி பார்க்கப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தாலி முதலிடத்தை பிடித்து இருக்கிறது. கிரீஸ் இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாவது இடத்தையும், ஜப்பான் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் 4.54 மதிப்பெண்கள் பெற்றுள்ள இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 460 வகையான உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரொட்டி, நாண், சட்னி, பிரியாணி, தால், தந்தூரி போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
எந்தக் கடைகளில் என்ன உணவுகள் புகழ்பெற்றவை என 450 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய் பூண்டு நாண், கீமா ஆகியவை முதலிடம் பிடித்த உணவுகளாக உள்ளன.
இந்தத் தரவரிசை பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்கள் பார்வையாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டன.
மும்பை உணவகத்தின் கிச்சடி, பெங்களூரு உணவகத்தின் ஆப்பம், டெல்லி உணவகத்தின் தந்தூரி சிக்கன், சென்னை பிரபல உணவகத்தின் குல்சா, மலாய் கோப்தா, பாலக் பன்னீர் போன்றவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகளவில் சிறந்த பாரம்பரிய உணவுகள் பிரிவில் இந்தியா அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. ஷாஹி பன்னீர் மட்டுமே 28-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவான பட்டர் சிக்கன் 53-வது இடத்தில் உள்ளது.
மெக்ஸிகோ, துருக்கி, அமெரிக்கா, பிரான்ஸ், பெரு, சீனா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்று இருக்கின்றன.